பிரித்தானியாவில் நீர் துறையில் வெளிப்படைத்தன்மையில்லை – நீர் நிறுவனங்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை
கடந்த வருடம், நீர் துறையில் தோல்வியடைந்த நிறுவன தலைமை நிர்வாகிகளுக்கு சலுகை வழங்க தடை விதிக்கப்பட்டிருந்த
போதிலும் சில நிறுவனங்கள் மில்லியன் கணக்கான பணம் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சலுகைகளை (bonus) வேறு பெயரில் வழங்குகின்றமை, அல்லது தாய் நிறுவனங்கள் வழியாக பணம் செலுத்துகின்றமைமே
இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
உதாரணமாக, தேம்ஸ் நீர் நிறுவனம் தடை செய்யப்பட்ட சலுகைகள் வழங்கப்படாதபோதிலும், “தக்கவைப்பு கொடுப்பனவுகள்” என்ற பெயரில் தலைவர்களுக்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளது. யார்க்ஷயர், தென் கிழக்கு , வெசெக்ஸ் போன்ற நீர் நிறுவனங்களிலும் இதே நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சுற்றுச்சூழல் செயலாளர் ஸ்டீவ் ரீட், தலைமை நிர்வாகிகள் மற்றும் நிதி அதிகாரிகளுக்கு சலுகை வழங்குவதைத் தடுக்க முயன்றார்.
ஆனால் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீர் சட்டம் “செயல்திறன் சார்ந்த” சலுகைகளுக்கு மட்டுமே தடை விதித்ததால், சில நிறுவனங்கள் அந்த சட்டத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தி பணத்தை வழங்கின.
இந்த நிலை காரணமாக, நீர் துறை நிறுவனங்கள் அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளன என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, புதிய நீர் சட்டமூலம் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் இனிவரும் காலங்களில் தாய் நிறுவனங்கள் வழியாக சலுகை வழங்க அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், சலுகைகள் செயல்திறனை பிரதிபலிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் எந்த பணமும் வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
நீர் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் எம்மா ஹார்டி கூறியுள்ளார்.
நீர் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க கடுமையான விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




