சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!
சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
“இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார்.
சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் ஒருவரே, இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அது தொடர்பில் இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை முன்னெடுக்குமானால் சபாநாயகர் பதவி விலக வேண்டும்.
இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்த பேரவையின் தலைவராக சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமம் எனில், சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் மரிக்கார் எம்.பி. மேலும் வலியுறுத்தினார்.




