மழை காரணமாக சமநிலையில் முடிந்த சென்னை லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி
ஐபிஎல் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின.
போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை காரணமாக டாஸ் போடுவது சிறிது தாமதம் ஆனது. மழை நின்ற பின்னர் டாஸ் சுண்டப்பட்டது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
லக்னோ அணியில் காயம் காரணமாக கேப்டன் கே.எல்.ராகுல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக குர்ணால் பாண்ட்யா லக்னோ அணியை வழிநடத்துகிறார்.
அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 44 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரனும், ஆயுஷ் பதோனியும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி ரன் சேகரிப்பில் துரிதமாக செயல்பட்டது.
இவர்கள் 59 ரன்கள் சேர்த்த நிலையில் பூரன் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து கிருஷ்ணப்பா கவுதம் களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய பதோனி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
வெகுநேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.