பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நேரடியாக கெட்ட வார்த்தையில் திட்டிய நபர்; வைரல் வீடியோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கை கொடுக்க மறுத்த இளைஞர் ஒருவர், அவரை பார்த்து சரமாரியாகக் கேள்விகளைக் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் சில காலமாகவே மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கனடாவில் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா காரணம் என்று அவர் சொன்னதே இதற்குக் காரணம். இருப்பினும், இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நாஜி படை வீரர் கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்ட விவகாரமும் பூதாகரமானது. இந்த சூழலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. தனது ஆதரவாளர்களிடம் பேசி வந்த ஜஸ்டின் ட்ரூடோவை நோக்கி அங்குள்ள நபர் ஒருவர் சரமாரியாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். இந்த வீடியோ ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எந்தளவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
கனடாவின் முக்கிய நகரான டொராண்டோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். அப்போது ட்ரூடோ இந்த நபருக்கு கை கொடுக்க வந்தார். உங்களுக்கு எல்லாம் கை கொடுக்க முடியாது என்று அந்த நபர் கூறி பின்னோக்கி நகர்கிறார். உடனே ட்ரூடோ, “ஏன்.. என்ன நடந்தது” எனக் கேட்டார். அந்த நபர் உடனே கொந்தளித்து விட்டார்.
அந்த நபர் கனடாவில் வீடுகள் விலை உச்சத்தில் இருப்பதாகவும், கார்பன் வரி என பல்வேறு பிரச்சினைகளால் கனடா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டார். மேலும், “நீ இந்த நாட்டையே முற்றிலுமாக நாசமாக்கிவிட்டாய்” என்று சொன்ன அந்த நபர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கெட்ட வார்த்தையில் திட்டுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
நான் என்ன செய்தேன் என்று ட்ரூடோ கேட்க.. அதற்கு அவர் “இப்போது இருக்கும் சூழலில் யாராவது ஒருவரால் வீடு வாங்க முடியுமா?” எனக் கேட்டார். அதற்கு ட்ரூடோ, வீடுகள் விலையேற்றம் மத்திய அரசின் பொறுப்பு இல்லை. அது உள்ளூர் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று மழுப்பலான பதிலைக் கூறுகிறார்.
உடனே அடுத்து அந்த நபர், “ஏழை மக்களிடம் இருந்து கார்பன் வரி என்று தனியாக வாங்குகிறார்கள்” என்கிறார். அதற்கு ட்ரூடோ, “அந்த கார்பன் வரியை வைத்து நாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியுமா.. நாங்கள் காற்று மாசு உள்ளிட்ட பல மாசுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வரியை மீண்டும் உங்களைப் போன்ற குடும்பங்களுக்கே திருப்பித் தருகிறோம்” என்று பதில் அளித்தார்.
அப்போதும் விடாத அந்த நபர், “இல்லை நீங்கள் அதை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளீர்கள்.. சொந்த நாட்டினரையே கொன்று குவிக்கும் நபருக்கு அனுப்புகிறீர்கள்” என்று சொல்கிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ட்ரூடோ, “நீங்கள் புதின் பேச்சை நிறையக் கேட்கிறீர்கள் போல.. ரஷ்யா பல்வேறு தவறான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது” என்று சமாளித்தவாறே சொல்லவிட்டு, அந்த நபரைத் தட்டிக் கொடுத்தபடி அங்கிருந்து நகர்ந்து தனது காரை நோக்கிச் செல்கிறார்.
அப்போதும் அந்த நபர் கெட்ட வார்த்தையைச் சொல்லி ட்ரூடோவை திட்டுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சொந்த நாட்டிலேயே எந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மக்களிடையே எதிர்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அடுத்து நடக்கும் தேர்தலில் ட்ரூடோ வெல்வது ரொம்ப கடினம் என்றே கூறப்படுகிறது.
https://twitter.com/i/status/1710078998804594917