பிரித்தானியாவில் ஆவணங்களின்றி பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆபத்து
பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக உணவகம் மற்றும் கட்டிட வர்த்தக நிலையங்கள் அதிக குடியேற்ற சோதனைக்குட்படுத்துவதாக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் 112,000 க்கும் அதிகமான சட்டவிரோத தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புகலிடக் கோரிக்கைகளின் நிலுவையை அகற்றுவதற்கான இலக்கை எட்டியுள்ளதாக செவ்வாயன்று உள்துறை அலுவலகம் அறிவித்தது.
கடந்த ஆண்டில் புகலிடம் கோரும் மக்கள் தானாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு கட்டாயமாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உண்மையில் பிரித்தானியாவை விட்டு வெளியேறுபவர்களின் விரிவான பதிவுகளை அரசாங்கம் வைத்திருக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். நாட்டை விட்டு வெளியேறும் நபர்களை நாங்கள் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் எங்களுக்குத் தெரிந்த விடயம் என்னவென்றால், தன்னார்வமாக வெளியேறும் மக்கள் தொகையில் 66% அதிகரிப்பு உள்ளது. சட்டவிரோதமாக வந்தால், இங்கு நீங்கள் தஞ்சம் பெறப் போவதில்லை என்று நாங்கள் மக்களுக்குச் சொல்கிறோம். நீங்கள் நாட்டிற்கு செல்ல வேண்டும்.
மேலும் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் மீதான சோதனைகளை கணிசமாக அதிகரிக்கிறோம், எனவே இறுதியில் அவ்வாறான நபர்களைக் கண்டுபிடிப்போம்.
ஆடை வியாபார நிலையங்கள், சில சமயங்களில் உணவக வியாபாரம், கட்டிட வியாபாரம் போன்றவற்றில் அடிக்கடி சட்ட விரோதமாக வேலை செய்பவர்களை நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் எங்கு செல்கிறார்கள்? மற்றும் பொதுவாக என்ன வேலை செய்கிறார்கள்?, கையில் பணம் வைத்திருக்கின்றார்களா? என்பதனை ஆராய்கின்றோம்.
ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அவற்றைக் கண்டுபிடித்து அகற்றுவோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.