தாய்லாந்தில் அமுலில் இருந்த தடை நீக்கம் – மகிழ்ச்சியில் மக்கள்
தாய்லாந்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்களை விற்கவும், அருந்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த தடை தளர்த்தப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
பகல் வேளையில் மக்கள் மது அருந்துவதைத் தடுக்கும் விதமாக, சமீபத்தில் இந்தக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு விதித்திருந்தது.
இந்தத் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 8ஆம் திகதி இந்தத் தடை அமலுக்கு வந்த நிலையில், நாட்டின் சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோரும், பார் உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்தத் தடை தங்கள் வருவாயைப் பெரிதும் பாதிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்ததையடுத்து, தாய்லாந்து அரசு தனது முந்தைய முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் தாய்லாந்துப் பொருளாதாரத்திற்கு இந்தத் தடை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அரசின் இந்தத் தளர்வு அறிவிப்பு சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





