விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி விமர்சனம்

விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் தலைவன் தலைவி இன்று வெளியாகி இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் யோகி பாபு, தீபா, சரவணன், மைனா நந்தினி, ரோஷினி என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் விமர்சனம்…
ஹோட்டல் தொழில் செய்து வரும் விஜய் சேதுபதிக்கும் நித்யா மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருவரும் காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். ஆனால் அப்போது விஜய் சேதுபதி அவருடைய அப்பா தம்பி எல்லோரும் அடிதடி செய்பவர்கள் என்ற விவரம் தெரிய வருகிறது.
இதனால் திருமணத்திற்கு தடை ஏற்படுகிறது. ஆனாலும் வீட்டை எதிர்த்து நித்யா மேனன் விஜய் சேதுபதியை கல்யாணம் செய்கிறார். அதன் பிறகு குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு சண்டை பூதாகரமாக வெடிக்கிறது. இதில் இருவரும் பிரிய நேரிடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? தலைவன் தலைவி ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் கதை.
தினம் தினம் எல்லார் வீட்டிலும் நடக்கும் பிரச்சினை தான் படத்தின் மையக்கரு. ஆனால் அதை இயக்குனர் கொடுத்திருக்கும் விதம் ரசிக்க வைத்துள்ளது. காமெடி சென்டிமென்ட் ரொமான்ஸ் என அனைத்துமே இருக்கிறது.
அதேபோல் விஜய் சேதுபதி நித்யா மேனன் இருவரும் ஆகாச வீரன் பேரரசி கதாபாத்திரங்களை நிறைவாக செய்து இருக்கின்றனர். அப்படியே பக்கத்து வீட்டு மனிதர்கள் போல் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
மாமியாராக வரும் தீபா காட்டும் வில்லத்தனமும் யோகி பாபுவின் காமெடி என படத்தில் சொல்வதற்கு பல பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. பாடல்களும் ஆட்டம் போட வைக்கிறது.
இதை தாண்டி சில இடங்களில் கொஞ்சம் போரடிக்கும் உணர்வு இருக்கிறது. ஆனால் அது ஒரு பெரிய குறையாக தெரியாத அளவுக்கு இயக்குனர் திரைக்கதையை நகர்த்தி சென்றுள்ளார்.
மொத்தத்தில் தலைவன் தலைவி ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஃபுல் மீல்ஸ் தான். இந்த வார இறுதியை இந்த படத்தோடு தாராளமாக என்ஜாய் செய்யலாம்.