தமிழ் வீரர் அசத்தல்: இலங்கை அணி வெற்றி!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். அவரது பந்து வீச்சு பாணி தொடர்பான காணொளியும் வைரலாகி வருகின்றது.
மேற்படி வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள போதிலும் நிகர ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை விட பின்னிலையில் இருக்கிறது.
அயர்லாந்துடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தால் மாத்திரமே இலங்கை அரை இறுதிக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.
நேற்றைய ஆட்டத்தில் தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 262 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 46 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
விரான் சமுதித்த 110 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வழிசமைத்தார். ஆட்ட நாயகனாக விரான் சமுதித்த தெரிவு செய்யப்பட்டார்.





