தைவான் விவகாரம்! ஜப்பான் – சீனா மோதல் தீவிரம்
தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வானின் பாதுகாப்பு குறித்து ஜப்பானியப் பிரதமர் சனாய் தகைச்சி (Sanae Takaichi) தெரிவித்த கூற்றுக்கு, ஒசாகாவில் உள்ள சீனத் தூதர் சூ ஜியான் (Xue Jian) வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் விசாரிக்க, ஜப்பானுக்கான சீனத் தூதரை (Ambassador Wu Jianghao) ஜப்பானின் வெளியுறவு அமைச்சு அழைத்துள்ளது.
தாய்வானில் கடல் பகுதியில் இராணுவ முற்றுகை உட்பட எந்தவொரு நடவடிக்கையை சீனா எடுத்தாலும், அது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் என ஜப்பானியப் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஒசாகாவில் உள்ள சீனத் தூதர் சூ ஜியான், சமூக ஊடகமொன்றில் பிரதமரின் கழுத்தை வெட்டுவேன் என பொருள்படும் பதிவொன்றை வெளியிட்டிருந்த நிலையில், சற்று நேரத்தில் அதனை நீக்கியிருந்தார்.
சீனத் தூதர் சூ ஜியான் தெரிவித்த கருத்துகள் மிகவும் பொருத்தமற்றவை என ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தலைவர் தகாயுகி கோபயாஷி (Takayuki Kobayashi) கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.





