சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம் ; 14 வயதுச் சிறுவன் கைது
சிட்னி பல்கலைக்கழகத்தில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து 14 வயதுச் சிறுவனை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது.
அவசரகாலக் குழுவினர் 22 வயது நபருக்கு முதலுதவி செய்ததாகவும் பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை தெரிவித்தது.கடுமையாகக் காயமடைந்த அந்த நபர் சீரான உடல்நிலையுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அது கூறியது.
இச்சம்பவத்தை அடுத்து பொதுமக்களுக்கு அபாயம் ஏதுமில்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.
சிட்னி பல்கலைக்கழகத்தின் கேம்பர்டவுன் வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரிப்பதாகக் கூறிய பல்கலைக்கழகப் பேச்சாளர், விசாரணை முடியும்வரை காவல்துறையினர் அங்கு இருப்பர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பல்கலைக்கழகத்தின் சில கட்டடங்களைக் காவல்துறை மூடியுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு கூறியது.
முன்னதாக, சம்பவத்தை அடுத்து 14 வயதுச் சிறுவன் அங்கிருந்து கிளம்பி, பர்ராமட்டா ரோட்டில் ஒரு பேருந்தில் ஏறியதாகக் காவல்துறைக்குத் தகவல் தரப்பட்டது.
அதிகாரிகள் அச்சிறுவனை ராயல் பிரின்ஸ் அல்ஃபிரெட் மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
அச்சிறுவனும் பாதிக்கப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் என்று காவல்துறை பேச்சாளர் அந்த நாளேட்டிடம் கூறினார்.