தேர்தலில் போட்டியிடப் போகிறாரா சூர்யா? பரபரப்பு அறிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிடுவதாக சோசியல் மீடியாவில் பொய் செய்தி பரப்பப்படுகிறது என்று அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று கூறியதோடு, கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடிகர் சூர்யாவின் அறம் அறக்கட்டளை நிகழ்ச்சி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. சுமார் 6,500க்கும் அதிகமான முதல் தலைமுறை பட்டதாரிகளை சூர்யா உருவாக்கி இருப்பது பலரையும் வியப்படைய செய்தது.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யா திமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.
இதன் காரணமாக விஜய்யை பின்பற்றி விரைவில் நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப நடிகர் சூர்யாவும் ரசிகர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் சூர்யாவின் குடும்பத்தில் இருந்து ஒருவர் திமுக சார்பாக கொங்கு மண்டலத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது.
குறிப்பாக விஜய் பிரிக்கப்போகும் வாக்குகளை சமாளிப்பதற்காக திமுக தரப்பில் சூர்யாவை களமிறக்க திட்டமிட்டு வருவதாக சில செய்திகள் வெளியானது. சூர்யாவின் குடும்பம் கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திமுக காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தேர்தலில் போட்டியிடும் விவகாரம் தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள். சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே கவனம் இருக்கும்.
எங்கள் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே திமுக நிர்வாகிகள் சிலர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசி இருந்தனர். ஆனால் சூர்யா நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிவிட்டு, அரசியலுக்கு வருவது தொடர்பான பேச்சை அப்படியே கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.