இலங்கை தமிழர் முகாமில் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையை தாசில்தார் விடுத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள இலங்கை தமிழர் முகாமில் 928 குடும்பங்களை சேர்ந்த 2,760 இலங்கை தமிழர்கள் தங்களது குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த முகாம் அதிகாரியான தாசில்தாரின் கையெழுத்திட்டு ஒரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘முகாமில் வசிக்கும் சிலர் குற்ற செயல்கள் மற்றும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக அளவுக்கு அதிக அளவில் மதுஅருந்தி விட்டு முகாமில் தகராறு செய்பவர்கள், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்கள், திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்.
மேலும் அவர்களின் முகாம் பதிவு ரத்து செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.