ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழமையாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வந்து ராணுவ பணியில் சேருபவர்கள் என்று கூறப்படுகிறது.
சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால், தூதரகத்திடம் இது தொடர்பான சரியான தகவல்கள் இல்லாததால், அந்நாட்டு ராணுவத்தில் இலங்கையர்கள் பணிபுரிந்தால், அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு, ரஷ்ய பாதுகாப்புத் தலைவர்களிடம், தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய படைகளுடன் இலங்கையர் எவரேனும் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், இறக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என திருமதி ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.