இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பொது வேட்பாளர்! எதிர்க்கும் சுமந்திரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது வேட்பாளர் யோசனை மிகவும் மோசமானது எனவும், அது தமிழர்களின் பிரச்சினையை பலவீனப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தமிழர் பிரச்சனைகள் குறித்து செய்திகளை அனுப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய தேர்தல் அல்ல என்றார். “இது சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு அல்ல,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் மிகவும் மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இது ஒரு முட்டாள்தனமான யோசனை எனவும், இதனை நாங்கள் பகிரங்கமாக கண்டித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.