உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிஸ் சென்ற இலங்கை ஜனாதிபதி
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.
இந்த மாநாட்டுடன் நாளை ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.
உலகப் பொருளாதார மன்றம் என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் உலகளாவிய தளமாகும்.
அரசாங்கம், சர்வதேச நிறுவனங்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மன்றத்தில் சேருவார்கள்.
இந்த விஜயத்தின் போது, சுவிஸ்-ஆசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரீன் டெக் மன்றத்தில் ஜனாதிபதி முக்கிய உரையையும் நடத்த உள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுக்கும் என்பதே ஜனாதிபதியின் உரையின் பிரதான கருப்பொருளாகும்.
சுவிஸ்-ஆசிய வர்த்தக சம்மேளனத்துடன் இலங்கை முதலீட்டு சபை ஏற்பாடு செய்துள்ள வர்த்தக வட்டமேசை மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்வதுடன் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இடையே இருதரப்பு கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி நடத்த உள்ளார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ஆம் திகதி உகாண்டா செல்கிறார்.
ஜனாதிபதி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.