இலங்கை: நுவரெலியா தபால் நிலைய சொத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காக பிரத்தியேகமாக வைத்திருக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், சுற்றுலாத்துறை தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை அறிவித்த அமைச்சர் விஜித ஹேரத், நுவரெலியா தபால் நிலையச் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
நுவரெலியா தபால் நிலைய சொத்துக்கள் தொடர்பில் முன்னர் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்குவதற்கு முன்னாள் அரசாங்கம் திட்டமிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் திட்டமாக செயற்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில், அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தபால் அலுவலக கட்டிடத்தை சுற்றியுள்ள காணிகளில் ஹோட்டல்களை அமைப்பதற்கு மட்டுமே திட்டமிடப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.
தபால் நிலைய கட்டிடத்தை இடிக்கும் திட்டம் இல்லை என மீண்டும் வலியுறுத்திய அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டிடத்தை புனரமைக்க மட்டுமே முன்மொழியப்பட்டதாக தெரிவித்தார்.