இலங்கையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகம்!
நிட்டம்புவ பகுதியில் பொலிஸார் இன்று (01.10) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின்மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் வேனில் பயணித்த மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க வீதியில் உதம்விட சந்தியில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வெயாங்கொடவில் இருந்து நிட்டம்புவ நோக்கி அதி வேகமாக பயணித்த வேனை நிறுத்தும்படி சைகை செய்துள்ளனர்.
இருப்பினும் வேனின் சாரதி பொலிஸாரின் சைகையை பொருட்படுத்தாமல் பயணித்துள்ளார். இதனையடுத்து குறித்த வேனை துரத்திச் சென்ற பொலிஸார் ரி-56 துப்பாக்கி மூலம் வேனின் முன்புறத்திலும், பின் புறத்தில் இருந்த சக்கரங்களிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இவ்வாறாக வேனை மடக்கிபிடித்த பொலிஸார் அதில் பயணித்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.





