தாய்லாந்தில் விமான நிலையத்தில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தாய்லாந்தில் விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சிக்கிய பயணியின் கால் துண்டித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் டான் மியுயங் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையத்திற்கு நேற்று 57 வயதுடைய பெண் பயணி ஒருவர் அதே நாட்டின் தென்பகுதியில் உள்ள நகோன் சி தம்மராட் மாகாணத்துக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக வந்துள்ளார்.
அங்கு அந்த பெண் பயணி சூட்கேசுடன் விமான நிலையத்தில் உள்ள நகரும் நடைபாதையில் சென்றார். இந்த நகரும் நடைபாதை முடிவடையும் இடத்தில் போட்டிருந்த தட்டுகள் திடீரென உடைந்ததால், அதற்குள் அந்த பெண்ணின் இடது கால் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்டு, அங்கு வந்த ஊழியர்கள் அவரது காலை எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் இறுதியாக மருத்துவ குழுவின் உதவியுடன் அப்பெண்ணின் இடது காலை முழங்காலுக்கு மேலே வெட்டி எடுக்கப்பட்டது. அதன் பின்னர், அந்த பெண், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அந்தப் பெண்ணுக்கு வெட்டப்பட்ட காலை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று தெரிவித்ததால், வேறு மருத்துவமனைக்கு சென்று பார்க்குமாறு அப்பெண் கேட்டுக்கொண்டார். அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் விமான நிலைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.