கப்பல் விவகாரம்: அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி எழுப்ப வேண்டும் என்கிறது ஈரான்!
“ இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை தாக்குவது ஏன் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி எழுப்ப வேண்டும்.”
இவ்வாறு ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கதிப்சாதே Saeed Khatibzadeh கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் ஈரான் சார்பில் அவர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கிரேட்டர் இஸ்ரேல் என்ற போலி பிம்பத்தை கட்டமைக்கவே இந்த போர் நடைபெறுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி பேச்சுதான்.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கவில்லை. இந்தியாவுக்கு வரும் கப்பல்களை மறிக்கவும் இல்லை.
ஈரான் தனது பொறுப்புகளை நன்கு அறியும். அந்த வகையில் ஹார்முஸ் நீரிணை நிலைத்தன்மையை செம்மைப்படுத்தும் நங்கூரமாக ஈரான் செயல்படுகிறது.
எனவே, இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை தாக்குவது ஏன் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்க வேண்டும். ஏனெனில், அமெரிக்காதான் அச்சுறுத்தலாக விளங்குகிறது” என்றும் சயீத் கதிப்சாதே கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஈரான் போர்க்கப்பல் ஒன்றுக்கு இந்தியா புகலிடம் வழங்கியுள்ளது.





