சியோல் – தென் கொரியா, சீனா, ஜப்பான் இடையில் முத்தரப்பு உச்சநிலை மாநாடு
தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முத்தரப்பு உச்சநிலை மாநாட்டை மே 26-27 ஆகிய இருநாள்களில் சியோலில் நடத்துவார்கள் என்று சியோல் அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது.
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், சீனப் பிரதமர் லீ சியாங், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மே 26ஆம் திகதி நடத்துவார் என்றும் மறுநாள் முத்தரப்புப் பேச்சு இடம்பெறும் என்றும் தென் கொரிய துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிம் டே ஹியோ கூறினார்.
உச்சநிலை மாநாட்டைத் தொடர்ந்து பொருளியல், வர்த்தகம் உள்ளிட்ட ஆறு துறைகள் குறித்து மூவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என்று அவர் ஒரு மாநாட்டில் தெரிவித்தார்.
வட்டார ஒத்துழைப்பை அதிகரிக்க 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் உச்சநிலை மாநாட்டை நடத்த அண்டை நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் இருதரப்பு சச்சரவுகள், கொவிட்-19 தொற்றுநோய் பரவல் போன்றவற்றால் இந்த முயற்சி சீர்குலைந்தது. கடைசி முத்தரப்பு உச்சநிலை மாநாடு 2019 இறுதியில் இடம்பெற்றது.
சீன-அமெரிக்கப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான முத்தரப்பு பாதுகாப்பு பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் அதேவேளையில், தென் கொரியாவும் ஜப்பானும் வரலாற்றுப் பூசல்களால் மோசமான உறவுகளை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் இந்த உச்சநிலை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.