பூமியில் பல மர்மங்களுடன் புதைந்திருந்த பனிக்கட்டியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பூமியில் மறைந்திருந்த பனிக்கட்டிகளையும், அதனுள் உறைந்த காற்றையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈஸ்ட் அண்டார்டிகாவிலுள்ள ஆலன் ஹில்ஸ் (Allan Hills) பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், 60 இலட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டியை விஞ்ஞானிகள் மீட்டுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக ஆய்வுகளை மேற்கொள்ளும் குழு சுமார் இரண்டு கிலோமீட்டர் ஆழத்திலுள்ள பனிக்கட்டிகளை மீட்டு ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்.
எனினும், ஆலன் ஹில்ஸ் பகுதியில் சுமார் 100 முதல் 200 மீட்டர் ஆழத்திலேயே தொன்மையான பனிக்கட்டியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பனிக்கட்டிக்குள் உள்ள ஆர்கான் வாயுவின் ஐசோடோப்பை அளந்து, அதன் வயதை விஞ்ஞானிகள் துல்லியமாக உறுதி செய்துள்ளனர்.
இதன்மூலம் 60 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதிரிகள், புவியின் வரலாற்றில் நாம் அறியாத ஒரு காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
அந்தக் காலத்தில் புவியின் தட்பவெப்பநிலை இன்று இருப்பதைவிட மிகவும் வெப்பமாகவும், கடல் மட்டங்கள் மிக அதிகமாகவும் இருந்தமை தெரிய வந்துள்ளது.
60 இலட்சம் ஆண்டுகளில் அண்டார்டிகா கண்டம் படிப்படியாக சுமார் 12 டிகிரி செல்சியஸ் குளிர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரமாகவும் இந்தப் பனிக்கட்டி அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பனிக்கட்டிகளை ஆய்வு செய்வதன் மூலம் வாயுக்கள் மற்றும் கடல் வெப்பநிலையின் அளவுகளை ஆய்வு செய்ய முடியும். அத்துடன் எதிர்காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பதற்கான துல்லியமான மாதிரிகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





