மீண்டு வந்த சரண்யா பாக்யராஜ்: 18 ஆண்டு மௌனம் கலைந்தது!
தமிழ் சினிமாவின் “திரைக்கதை மன்னன்” பாக்யராஜின் மகள் சரண்யா, சுமார் 18 ஆண்டுகாலத் தனிமைக்குப் பிறகு மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான பக்கங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

2006-ம் ஆண்டு தனது தந்தை பாக்யராஜ் இயக்கத்தில் ‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. முதல் படத்திலேயே “உன்னைக் கண்டேனே…” பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஆனால், அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர், திடீரென திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார்.

சரண்யா திரையுலகை விட்டு விலகியதற்குப் பின்னால் ஒரு சோகமான காதல் கதை இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது காதல் தோல்வியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், சுமார் 18 ஆண்டுகளாக எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.

இந்த மன அழுத்தத்தின் காரணமாக அவர் மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அவரது தந்தை பாக்யராஜும், தாய் பூர்ணிமாவும் அவருக்குப் பெரும் துணையாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது 40 வயதாகும் சரண்யா, தனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து மீண்டும் புன்னகையோடு வலம் வருகிறார். சமீபத்தில் ஜீ தமிழ் (Zee Tamil) தொலைக்காட்சியின் ‘சமையல் எக்ஸ்பிரஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தனது தற்போதைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் அவர், தனது தம்பி சாந்தனுவின் குடும்பத்துடனும், தனது வளர்ப்பு மகனுடனும் (Adopted Son) நேரத்தைச் செலவிட்டு வருகிறார். “வாழ்க்கையில் கவலைகள் என்பது கடந்து போகும் மேகம் தான்” என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது தற்போதைய மாற்றம் அமைந்துள்ளது.





