“திருப்பதியில் கால் வைக்க முடியாது” சந்தானத்தை எச்சரிக்கும் ஜனசேனா

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் நாளை மறுதினம் (16ஆம் தேதி) திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படம் காமெடி பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிடி ரிட்டர்ன் என பெயரிலும் திகில் காமெடி படங்கள் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் காத்துள்ள நிலையில்,
திடீரென இந்த படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் ஒரு பாடல் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஸ்ரீனிவாச கோவிந்தா பாடலுக்கு குத்தாட்டம் லெவலில் டான்ஸ் ஆடி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பாஜக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று திருப்பதிக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜன சேனா கட்சி தலைவர் கிரண் ராயல் சந்தித்து பேசினார்.
அப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிகளையும் லேப்டாப்பில் போட்டு காண்பித்தார். எதிர்கட்சியாக அதிமுக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ் திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல் தொடர்பாக ஏற்கனவே திருமலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல், திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த படம் வெளியாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அந்தப் பாட்டை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஸ்ரீனிவாச கோவிந்தா பாடலைப் படமாக்கிய படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் தமிழக அரசியல் தலைவர்கள் திருப்பதி மலையில் கால் வைக்க முடியாது எனவும் மக்கள் பிரதிநிதிகள் திருப்பதிக்கு வந்தால் முற்றுகையிடுவோம் என ஜனசேனா கட்சி திருப்பதி மண்டல தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.