சைஃப் அலிகானுக்கு 35 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை 21-ம் தேதி டிஸ்சார்ஜ்…
கத்திக்குத்து காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், வரும் செவ்வாய்க்கிழமை (21) டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை, மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாதுகாப்பு மிக்க தனது குடியிருப்பில், நடிகர் சைஃப் அலிகான் அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்திற்கு ஆளானார்.
உடலில் சிக்கி இருந்த கத்தி மற்றும் 6 இடங்களில் ஏற்பட்ட காயத்துடன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்டார். அவர் அபாயக் கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான சைஃப் அலிகானின் காப்பீடு விவரத்தில், அவருக்கு 35 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் முதலில் அறுவை சிகிச்சைக்காக பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், வரும் செவ்வாய்க்கிழமை வரை அவர் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என்றும் காப்பீடு விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கான மருத்துவச் செலவும் 35 லட்சத்து 98 ஆயிரத்து 700 ரூபாய் என்றும், அதில், 25 லட்சம் ரூபாய் காப்பீடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சைஃப் அலி கானின் வலது கழுத்து, வலது தோள்பட்டையில் மிகப்பெரிய வெட்டும், முதுகின் இடப்பக்கத்தில் ஆழமான வெட்டும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.