சைஃப் அலிகானின் கத்திக்குத்து விவகாரத்தால் இளைஞனுப்பு நடந்த கொடுமை?
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கணேஜியா, தனது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டதாக கூறி வேதனை தெரிவித்துள்ளார்.
இதனால் தனது வேலை போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16ஆம் தேதி மர்ம நபர் புகுந்து திருட முயன்றுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலி கானை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் படுகாயம் அடைந்த அவர் ஆட்டோவின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 இடத்தில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அவரிக்கு இரண்டு இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓய்வில் இருந்த அவர் கடந்த 21ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
இந்த நிலையில், அவரை கத்தியால் குத்தியதாக முகமது ஹரிபுல் இஸ்லாம் என்ற நபரை 18ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் 18ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனேஜினா என்பவரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.
இவர் முகமது ஹரிபுல் இஸ்லாம் போலவே இருந்ததால் போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் உண்மையான குற்றவாளி அவர் இல்லை என தெரிந்த நிலையில், அவரை அடுத்த நாளே விடுதலை செய்தனர்.
இந்த நிலையில் தான் ஆகாஷ் வேதனை தெரிவித்துள்ளார். சைஃப் அலிகான் விவகாரத்தில் போலீசார் என்னை தவறுதலாக கைது செய்தது தொலைக்காட்சிகளில் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டனர்.
மேலும், எனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நின்று விட்டது. பெண் வீட்டாரிடம் என் குடும்பத்தினர் பேசியும் அவர்கள் மறுத்து விட்டனர். எனக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா என்றும் தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.