கொழும்பு வரும் ரஷ்ய தூதுக்குழு ஜனாதிபதியுடன் இன்று பேச்சு!
இலங்கைக்கு இன்று (26) பயணம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய தூதுக்குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவே கொழும்பு வருகின்றது.
நீண்டகால ஒத்துழைப்புக் கட்டமைப்பின் மூலம், பெட்ரோலிய விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட, இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையேயான உடன்பாடு செய்து கொள்வது குறித்து இக்குழு ஆராயவுள்ளது.
1974-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையுடன் ஒரு முறையான எரிசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மூத்த ரஷ்ய அதிகாரிகள்பேச்சு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,கடந்த வாரம் கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனைச் சந்தித்து தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு ரஷ்யாவின் உதவியைக் கோரி, பேச்சு நடத்தியிருந்தார்.
இதையடுடுத்து இன்று கொழும்பு வரும் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்துவார்.
இந்தப் பேச்சுகளைத் தொடர்ந்து, ரஷ்ய தூதுக்குழு ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவையும் சந்திக்கவுள்ளது.
ரஷ்ய தூதுக்குழுவில் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஜே.எஸ்.சி சருபெஷ்நெப்ட்டின் தலைவர் விளாடிமிர் கசோவ் மற்றும் செர்ஜி இவானோவிச் குட்ரியாஷோவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.




