ரோஹிங்கியா சிறுபான்மையினர் விவகாரம் – ஐ.நா நீதிமன்றத்தில் விசாரணை!
ரோஹிங்கியா இன சிறுபான்மையினருக்கு எதிரான இனப்படுகொலைக்கு மியான்மர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2019 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா (Gambia) முதன்முதலில் தொடர்புடைய வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்பித்த காம்பியா நீதி அமைச்சர் டவ்டா ஜாலோ ( Dawda Jallow), இராணுவ அரசாங்கத்துடனான தனது சொந்த அனுபவத்திற்குப் பிறகு “பொறுப்புணர்வின் காரணமாக” இந்த வழக்கைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.
ரோஹிங்கியா இன சிறுபான்மையினரில் சுமார் 1.2 மில்லியன் உறுப்பினர்கள் நெரிசலான முகாம்களில் தவிப்பதாகவும், அங்கு ஆயுதக் குழுக்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் சிறுமிகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை அப்போது ஆட்சியில் இருந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கி (Aung San Suu Kyi) மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





