அல்பேனியாவில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் – 16 பேர் காயம், பலர் கைது!
அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் (Tirana) உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரதமர் எடி ராமா (Edi Rama) பதவி விலக வேண்டும் எனக் கோரி மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடக அறிக்கைகளின்படி, அல்பேனியாவின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகிலும் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதில் குறைந்தது 16 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 13 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பேனியாவின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சரான துணைப் பிரதமர் பெலிண்டா பல்லுகு, அரசாங்க கட்டுமான ஒப்பந்தங்களை வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் பெலிண்டா பல்லுகு மற்றும், எடி ராமா ஆகிய இருவருமே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சமீப காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




