இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அவசர கடிதம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் (SLC) உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
“இலங்கை அதிகாரிகளுக்கு பதவியில் இருக்க தார்மீக, நெறிமுறை உரிமை இல்லை. அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் போன்ற மூத்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறாதது இலங்கையின் உலகக் கிண்ணப் பிரச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.