சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய பிரபல நடிகர்களுக்கு எதிராக வழக்கு

விதிகளை மீறி சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா. இவர் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் மீது சைபராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், இன்ஃப்ளுயன்சர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பலரும் இந்த சூதாட்ட செயலிகளில் பணத்தை இழந்துள்ளதாகவும், இதில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியுள்ளதாகவும் பனீந்திரா ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.