நேபாளம் – சீனா எல்லையில் மழை வெள்ளம்: 35 பேர் மாயம்

நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவால், இரு நாடுகளிலும் மொத்தமாக 35 பேர் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீனாவின் திபெத் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேபாள எல்லையை ஒட்டியுள்ள, திபெத்தின் ஜிகாசே மாகாணத்தில் அமைந்த கிராங்க் துறைமுகத்திற்கு அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
இவ்வேளையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதில் 11 பேர் சீன எல்லைக்குள் மற்றும் 6 பேர் நேபாள எல்லையில் மாயமானவர்களாக இருக்கின்றனர்.
இதற்கிடையில், சீனா மற்றும் நேபாளத்தை இணைக்கும் “மைத்ரி பாலம்” (Friendship Bridge) கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டம் வழியாக செல்லும் போதகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த வெள்ளப் பேரழிவில், 6 சீனர்கள் உட்பட மொத்தமாக 18 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக நேபாள அரசு தகவல் வெளியிட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் சீன மற்றும் நேபாள அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.