பங்கு சந்தையை ஆட்டம் காண வைத்த புஷ்பா 2
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது.
டிசம்பர் மாதம் நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. அதற்கு முன்னதாகவே இந்த படத்தின் முன்பதிவும் திரையரங்குகளில் தொடங்கியுள்ளது.
டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கிய முன்பதிவு மூலம் தயாரிப்பாளர்கள் சுமார் 25 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் முன்பதிவு மூலம் படத் தயாரிப்பாளர்கள் ரூ.60 கோடி வரை சம்பாதிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பான் இந்தியா லெவலில் இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலேயே ரூ.150 முதல் 200 கோடி வரை வசூல் ஆகலாம்.
புஷ்பா 2 முன்பதிவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. தியேட்டர் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் பங்குகள் சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.426 கோடி அதிகரித்துள்ளது. இந்தப் படம் பான் இந்தியா அளவில் ஒரு பரபரப்பை உருவாக்கி இருக்கிறது என்பது பங்குச் சந்தை தாக்கத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
ஏராளமான மக்களை தியேட்டருக்கு இழுக்கும் சக்தி புஷ்பா 2 படத்துக்கு உள்ளது. இதனால் தியேட்டர்கள் லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரித்தால், தியேட்டர் நிறுவனத்தின் பங்குகள் உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை தரவுகளின்படி, வெள்ளியன்று பிவிஆர் ஐனாக்ஸின் பங்குகள் ரூ.1540-ல் முடிவடைந்தது. திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.1,558-ல் துவங்கியது. பின்னர் சுமார் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. வர்த்தகத்தின்போது பங்கு விலை அதிகபட்சமாக ரூ.1583.40 வரை சென்றது. மதியம் 2 மணியளவில் 2.25 சதவீதம் உயர்வுடன் ரூ.1,574.65க்கு வர்த்தகமானது. டிசம்பர் 18, 2023 அன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.1,829 ஐ எட்டியது.
தற்போது, பிவிஆர் ஐனாக்ஸின் பங்குகள் புஷ்பா 2 படத்தின் மூலம் புதிய சாதனையை எட்டக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். பிவிஆர் ஐநாக்ஸ் பங்குகளின் விலை உயர்வு காரணமாக, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிவிஆர் ஐனாக்ஸின் சந்தை மதிப்பு ரூ.15,122.79 கோடியாக காணப்பட்டது. திங்கட்கிழமை வர்த்தகத்தின்போது ரூ.15,548.97 கோடியை எட்டியது. அதாவது சில நிமிடங்களில் பிவிஆர் ஐநாக்ஸின் சந்தை மதிப்பு ரூ.426.18 கோடி அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் உயர்வைக் காணலாம்.