இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பதிவு!
தேர்தல் தொடர்பான மொத்தம் 173 முறைப்பாடுகள் இலங்கை காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
அதில் 119 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் மற்றும் தீ வைப்பு போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகள் தொடர்பில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.