பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி – தீவிர தேடலில் காவல்துறை!
பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எத்தியோப்பிய நாட்டவரான ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு ( Hadush Gerberslasie Kebatu) நாடு கடத்தப்படுவதற்கு முன்பு சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.
இந்நிலையிலேயே அவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவரை கண்டுப்பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும் அவர் எவ்வாறு அல்லது எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. அத்துடன் அவரை விடுதலை செய்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





