விஜய் மீது தேச குற்ற வழக்கு பாயுமா? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் விதிமீறல்கள் இருப்பதாகவும் தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த கொடியில் தேர்தல் விதிமீறல்கள் இருப்பதாகவும் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி (நேற்று) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இரு பிளிறும் போர் யானைகள், நடுவில் வாகை மலர், 28 நட்சத்திரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் விஜய்யின் கொடியில் யானை படம் இடம்பெற்றிருப்பதற்கு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து காவல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக கொடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக ஆர்டிஐ செல்வம் புகார் அளித்துள்ளார்.
மேலும் கேரளா அரசின் போக்குவரத்து சின்னமான யானை, தவெக கொடியில் இடம்பெற்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இந்தியாவை அவமதிக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடியின் நிறத்தையும் விஜய் தனது கொடியில் வைத்துள்ளார். எனவே அவர் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.