உக்ரைன் மீதான தாக்குதல்களின் போது தனது வான்வெளியை மீறிய ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய போலந்து

போலந்து முதன்முறையாக உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலில் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
மேற்கு உக்ரேனில் ரஷ்யா வான்வெளித் தாக்குதலை நடத்தியது. அப்போது ரஷ்ய வானூர்திகளை வானில் சுட்டு வீழ்த்தியதாகப் போலந்து புதன்கிழமை (செப்டம்பர் 10) கூறியது.
உக்ரேனிய எல்லைப் பகுதிக்கு மேலே போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய வானூர்திகள் மீண்டும் மீண்டும் அத்துமீறியதாகப் போலந்தின் ராணுவத் தளபத்தியம் தெரிவித்தது.
நாட்டின் வான்வெளிக்குள் வானூர்திகள் நுழைந்ததை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாய்ப் பார்ப்பதாகப் போலந்து ராணுவம் கூறியது.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமைந்ததால் அவற்றைச் சுட்டு வீழ்த்தியதாகப் போலந்து ராணுவம் சொன்னது.
ராணுவ நடவடிக்கை தொடர்வதாகக் குறிப்பிட்ட அது, பொதுமக்களை இல்லங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
போட்லாஸ்கியே, மஸோவியெட்ஸ்கியே, லுப்லின் ஆகியவை அதிக ஆபத்து நேரக்கூடிய வட்டாரங்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
போலந்து ராணுவம், நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் உடனடிப் பதிலடிக்குத் துணை ராணுவப் படையினர் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தது.