மனித உடலில் கொழுப்பை அதிகரிக்கும் பிளாஸ்டிக்!
உலக நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், இன்றளவும் அது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பல பாதிப்புகள் இருக்கிறது என்றாலும், அதை முழுவதுமாக நம்மால் தவிர்க்க முடியவில்லை.
அதேசமயம் உலக நாடுகளில் தற்போது உடல் பருமனும் சவாலான ஒன்றாகவே மாறியுள்ளது. ‘இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு உடல் பருமனாக பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கிறது’ என நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இப்போதெல்லாம் பல உணவு பண்டங்களும், தண்ணீரும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கலன்களிலேயே கொடுக்கப்படுகிறது. அத்தகைய பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருட்கள் நாம் உண்ணும் உணவு வழியாக உடலுக்குள் சென்று, செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துவதாக நார்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாக மனித உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாகப் பெருகி வளர்கிறதாம். உணவுப் பண்டங்கள் வைக்கும் பிளாஸ்டிக் பைகள், சமையல் அறையில் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஸ்பான்ச், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் 34 விதமான பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள, உடல் பருமனை அதிகரிக்கும் வேதிப்பொருட்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த பிளாஸ்டிக்குகளில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பதையும் அவற்றில் 629 வகைகள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்றும் பிரித்துள்ளனர். இதிலும் 11 வேதிப்பொருட்கள் மனித செரிமான அமைப்புக்கு இடையூறு செய்து நமது உடற்பருமனை அதிகரிக்க வைக்கும் என்ற அதிர்ச்சி உண்மையும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனால்தான் உணவு மற்றும் குடிநீரை சேமிப்பதற்கு பிளாஸ்டிக் கலன்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இப்படிச் செய்வதும் நம்முடைய உடற்பருமனை குறைக்க உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.