பிரான்ஸில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்

பிரான்ஸில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் வெளியான புள்ளிவிபரங்களுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் படி பிரான்ஸில் தற்போது 77,647 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6.1% சதவீதம் அதிகமாகும். அதேவேளை, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி நிலவரப்படி 77,450 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
பிரான்ஸில் தற்போது 3,405 கைதிகள் மெத்தையினை தரையில் போட்டுக்கொண்டு உறங்குவதாகவும், பிரான்ஸில் மொத்தமாக 61,966 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளதாகவும், 16,000 இற்கும் அதிகமான கைதிகள் மேலதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, 17,558 கைதிகள் இலத்திரனியல் காப்புகளுடன் விடுதலை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.