பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
பழம்பெரும் நடிகை புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை புஷ்பலதா. கடந்த 1958-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்தபோது புஷ்பலதாவுக்கும் – ராஜனுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடைசியாக 1999-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ படத்தில் நடித்திருந்தார் புஷ்பலதா. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.