குட்டி போடும் ஆண் கடல் குதிரை பற்றி உங்களுக்கு தெரியுமா? வைரலாகும் அரிய வீடியோ
கடற்குதிரைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் கடல்வாழ் உயிரினங்களில், கடற்குதிரை மட்டுமே ஆண் உயிரினம் குழந்தைகளை பெற்றெடுக்கிறது.
பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (சுமார் 200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.
குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ 1 செ.மீ இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.
உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன.
இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன.
பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை. கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்.
மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும்.