விரைவில் புதிய ரீல்ஸ் செயலியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்!

அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள பயனர்களை ஈர்க்கும் விதமாக, ரீல்ஸ்களுக்கென பிரத்யேகமான புதிய ஆப்பை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் கொண்டுள்ள டிக்டாக் ஆப்பிற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்திருக்கின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் வீடியோவைப் பிரத்யேகமாகக் கொண்ட புதிய ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரம் வெளியாகியிருக்கும் சமீபத்திய தகவல்படி, இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மோசேரி மற்றும் அவரது குழுவினர் இதுகுறித்து விவாதித்ததாகவும், அதற்கான உத்திகள் குறித்து அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ரீல்ஸைத் தனியாக ஓர் புதிய ஆப் மூலம் வழங்குவது குறித்து, தி இன்ஃபர்மேஷன் தனது அறிக்கையில், மொசேரியுடனான சந்திப்புகளில் பங்கேற்றவர்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
டிக்டாக் அமெரிக்காவில் அதன் செயல்பாடுகளைத் தொடரப் போராடி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிக்டாக் தளத்தை மைக்ரோசாப்ட் அல்லது எலான் மஸ்க் போன்ற அமெரிக்க நிறுவனம் அல்லது நபர்களின் மூலம் நிர்வகிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் இந்திய சந்தையில் வெற்றி கண்டுள்ளது. அதே நேரத்தில், யூடியூப் ஷார்ட்ஸையும் மக்கள் விரும்புகின்றனர்.
இத்தகைய சூழலில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பிரத்யேகமான ஆப்பின் மூலம் மக்களுக்கு வழங்க மெட்டா ஏன் விரும்புகிறது என்று யோசித்தால், அதற்கான சாத்தியமான இரண்டு காரணங்களை உற்றுநோக்க முடிகிறது. அதில், ஒன்று அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, மற்றொன்று கூடுதல் அம்சங்களுடன் இதேபோன்ற ஒரு ஆப்பை வழங்குவதன் மூலம் மக்களின் தேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதிலும், குறிப்பாக ரீல்ஸ் ஆப்பைத் தனியாக வழங்குவதன் மூலம் மெட்டா அதன் வளங்களை விரிவுபடுத்தவும், வெவ்வேறு வகையான பார்வையாளர்களைக் கவரவும் இது முக்கிய காரணமாக இருக்கலாம். இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் வீடியோ ஷேரிங்குக்கான லாஸ்ஸோ ஆப்பில் இதனை நிறுவனம் ஏற்கனவே முயற்சி செய்திருந்தது, ஆனால் அது டிக்டாக்கிற்குச் சரியான போட்டியாளராக நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டா தனது நெட்வொர்க்கில் பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவை அடங்கும். இதில், இந்த மூன்று ஆப்களுடனும் ரீல்ஸை வழங்குவதற்கு அதன் தொழில் உத்தி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனினும், ரீல்ஸ் குறித்த இந்த முக்கிய மாற்றம் குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடப்படவில்லை, ஆனால் இன்ஸ்டாகிராமில் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாற்றங்களைக் காண முடியும் என்று கூறப்படுகிறது.