மிகப்பெரிய பொருளாதார திட்ட முன்மொழிவுகளை தயாரிக்குமாறு பணிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் அதிகாரிகளுக்கு மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது:
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன.
இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார்.
‘வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.





