கடவுச்சீட்டுக்காக காத்திருப்போரின் வரிசைக்கு முடிவு
கடந்த மாதத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையம் (ஆன்லைன் முறை) மூலம் கிட்டத்தட்ட 30,000 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.
இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதத்தில் 29,578 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் ஒரு நாள் சேவைக்காக 5,294 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், பொது சேவைக்காக 24,285 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை இணையத்தளத்தின் ஊடாக பிராந்திய செயலகங்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஜூன் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும், அன்றைய தினம் முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
விண்ணப்பதாரரின் பெயரைப் பதிவுசெய்வதற்கு, நியமிக்கப்பட்டுள்ள 51 பிராந்திய செயலகங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடுவது அவசியமாகும், இது தொடர்பான கொடுப்பனவுகளை இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் கிளைக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த முறைமையினால் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.