இரண்டு வயது குழந்தையை சூட்கேசுக்குள் வைத்து பயணம் செய்த நியூசிலாந்து பெண் கைது

இரண்டு வயதுப் பெண் பிள்ளையைப் பயணப் பெட்டிக்குள் வைத்து பேருந்துப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து பெண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) கைது செய்யப்பட்டார்.
பிள்ளையைக் கொடுமைப்படுத்தியது தொடர்பில் அந்தப் பெண்மீது குற்றம் சாட்டப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேருந்து நின்றபோது அந்தப் பயணப்பெட்டி சந்தேகத்தைத் தூண்டும்விதமாக அசைந்துகொண்டிருந்ததை பேருந்து ஓட்டுநர் கண்டார்.
அதனையடுத்து, ஆக்லாந்து நகரின் 100 கிலோமீட்டர் வடக்கிலுள்ள கைவாக்கா பேருந்து முனையத்திற்குக் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
பயணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதனுள் இரண்டு வயதுச் சிறுமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியின் உடல் சூடாக இருந்ததைத் தவிர அவருக்கு ஒன்றும் ஆகவில்லை எனத் தோன்றுவதாக அதிகாரிகள் கூறினர். தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 27 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார்.