பிரபலமான சுற்றுலா தலங்களில் வெளிநாட்டு பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க நியூசிலாந்து முடிவு
பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வழிகளைத் தேடும் நியூசிலாந்து அரசாங்கம், மில்ஃபோர்ட் டிராக், மவுண்ட் குக் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் வெளிநாட்டுப் பயணிகளிடம் NZ$40 (S$30) வரை கட்டணம் வசூலிக்க உள்ளது.
நியூசிலாந்தின் தூய்மையான தேசிய பூங்காக்கள், நடைபாதைகள் ‘நியூசிலாந்து மக்களுக்கு உண்மையிலேயே சிறப்புமிக்கவை’ என்றும் அதிகப் பயணிகள் வருகை தரும் இடங்களில் வெளிநாட்டினர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஓர் உரையில் பிரதமர் கிறிஸ்தஃபர் லக்ஸன் கூறினார்.
இதன்மூலம் ஆண்டுக்கு NZ$62 மில்லியன் வருமானம் கிடைக்கும். இது, அந்த இடங்களின் மேம்பாட்டிற்காக மீண்டும் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
“வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்கள், உலகின் மிக அழகான சில இடங்களை இலவசமாகப் பார்வையிடலாம் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாக நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்று லக்ஸன் கூறினார்.
“இந்தச் சிறப்புமிக்க இடங்களில், வெளிநாட்டுப் பயணிகள் ஒரு நபருக்கு NZ$20 முதல் NZ$40 வரை கூடுதல் பங்களிப்பு செய்வதே நியாயமானது,” என்றார் அவர்.
2024ல் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலையிலிருந்து நியூசிலாந்து மீண்டுவரும் நிலையில், பொருளியல் வளர்ச்சியை வேகப்படுத்தும் ஒரு முக்கிய வழியாக சுற்றுலாத் துறையை அது அடையாளம் கண்டுள்ளது.
பயணிகளை ஈர்க்கும் விதமாக சீனப் பயணிகளுக்கான அதிகச் செலவுள்ள போக்குவரத்து விசாவை அரசாங்கம் நவம்பர் முதல் மாற்றியமைக்கவுள்ளது.





