ரஷ்ய இராணுவ அமைப்பில் புதிய படைப்பிரிவு – ஜனாதிபதி புட்டினின் அடுத்தகட்ட நடவடிக்கை
ரஷ்யாவின் இராணுவக் கட்டமைப்பில் ஆளில்லா அமைப்புகள் படை (Unmanned Systems Force) என்ற புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போரின் போது ட்ரோன் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
அண்மையில் மொஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டம் ஒன்றின்போது ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவராக செர்ஜி இஷ்டுகனோவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்ய ஆயுதப் படைகளில் ஆளில்லா அமைப்புப் படையின் துருப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய படை, போர் நடவடிக்கைகளில் மற்ற இராணுவப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.
தற்போதுள்ள பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் புதிய பிரிவுகளை உருவாக்குவதற்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போரில் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
இந்தப் புதிய படைப்பிரிவின் நிபுணர்களுக்கான பயிற்சிகள், பாதுகாப்பு அமைச்சக கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட மையங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
ரஷ்ய ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள ஆளில்லா அமைப்புகள் படைக்காக, உயர் இராணுவக் கல்வி நிறுவனத்தை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.





