சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறைகள்!
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிகளை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியது.
கடந்த வாரம் இந்த விதிகள் அறிமுகமாகியுள்ளது. அதற்கமைய. அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் அபாயங்களிலிருந்தும் வெளிப்புறத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களை பாதுகாப்பதையே அந்த புதிய விதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிப்புறங்களில் கடுமையான உடல் உழைப்பை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 நிமிட இடைவெளி கட்டாயமாகும்.
இந்த புதிய நடவடிக்கைகள், அதிக வெயிலுக்கு உடலை பழக்கப்படுத்துதல், தண்ணீர் குடித்தல், ஓய்வு எடுத்தல் மற்றும் நிழலில் இருப்பது ஆகிய நான்கு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றது.
இந்நிலையில், இதனை பல ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், சிலர் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அரசாங்கம் எவ்வளவு புதிய நடைமுறைகளை கொண்டு வந்தாலும் சில முதலாளிகள் அதை பின்பற்றுவதில் கேள்விக்குறி உள்ளதாக சில ஊழியர்கள் கூறினர்.
இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டனவா என்பதை உறுதிசெய்ய வேலையிடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
இதனை பின்பற்றதாக முதலாளிகள், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அதாவது, வேலை நிறுத்த உத்தரவு மற்றும் அபராதம் ஆகியவையும் விதிக்கப்படலாம்.
வெளிப்புற வேலைகளை படிப்படியாக பழகிக்கொள்ள புதிய ஊழியர்களுக்கு நேரம் வழங்கப்பட வேண்டும். அனைத்து வெளிப்புற ஊழியர்களும் குறைந்தபட்சம் 1 மணிநேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்த வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
ஊழியர்கள் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நிழலான பகுதிகளில் ஓய்வு எடுக்க இடைவேளைகளையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.