ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவை இணைக்க உருவாகும் புதிய சட்டமூலம்!
ஐரோப்பிய ஒன்றியத்துடன் , பிரித்தானியாவை மீளவும் இணைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் புதிய சட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துடன் இங்கிலாந்தை இணக்கப்படுத்த அமைச்சர்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பிரெக்ஸிட் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படும் இந்த சட்டமூலம் உணவுத் தரநிலைகள், விலங்கு நலன் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்ற சில விதிகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு ஏற்ப பிரித்தானிய அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனை டைனமிக் அலைன்மென்ட் (dynamic alignment) என அழைக்கிறார்கள்.
இதன்படி மின்சாரம் மற்றும் கார்பன் சந்தைகளை சீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் அல்லது தாவர மற்றும் விலங்கு தரநிலைகள் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்த அமைச்சர்கள் புதிய அதிகாரங்களை பயன்படுத்தலாம் என புரிந்துக்கொள்ளப்படுகிறது.
இங்கிலாந்து உணவு உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பெரும்பாலும் பின்பற்றி வருவதால், புதிய சட்டமூலம் சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என சில அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் ஒற்றை சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் சப்ளையர்களுக்கு இது விலையுயர்ந்த மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஆவணங்களைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும் கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்த இங்கிலாந்து எம்.பி.க்கள் இருவரும் இந்த திட்டங்களை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





