“லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்” நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதேபோல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற 2 இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கான இடத்தை நிலைநிறுத்தி வரும் நயன்தாராவுக்கு ரசிகர்கள் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற புனைப்பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். பின்னர் ‘லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா’ என்பது அவரது அடையாளமாகவே மாறிவிட்டது.
ஹீரோக்களுக்கு மட்டுமே பட்டங்கள் கொடுக்கப்பட்டதை மாற்றியமைத்தது நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம். பல இடங்களில் இதனால் அவர் விமர்சனங்களை சந்தித்ததும் உண்டு.
மேலும் தான் பங்கேற்ற சில நேர்காணல்களில் தன்னை ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம் என்று கூறிய நயன்தாரா, படங்களில் டைட்டிலில் அவரது பெயர் குறிப்பிடப்படுவதையும் தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ‘இனி தன்னை யாரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும், அது என்னை ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தனிநபராகவும் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், பட்டங்களும், விருதுகளும் மதிப்பு மிக்கவைதான் ஆனால் சில சமயங்களில் அவை உங்கள் அன்பான தொடர்பில் இருந்து பிரிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த அறிக்கை தற்போது பேசுபொருளாகி உள்ளது.