தேசிய நாமல் உயன ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனம்!
தேசிய நாமல் உயனவை ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் உயன, தேசிய, சமய, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாகப் பல பெறுமதிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும்.
இதன் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க, புத்தசாசன அமைச்சின் தலையீட்டுடன் இது தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடையாளப்படுத்தும் பெயர்ப் பலகையை ஜனாதிபதி இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகத் திறந்து வைத்தார்.
இந்த தனித்துவமான சுற்றாடல் மரபுரிமையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய தேசியப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
ஆரம்பம் முதல் இன்று வரை நாமல் உயனவைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வனவாசி ராகுல தேரர் ஆற்றிய அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.

நாமல் உயனவின் 35 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை, ‘தேசிய நாமல் உயன கல்விச் சஞ்சிகை’ ஆகியவற்றை வனவாசி ராகுல தேரர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கம் செய்த மிகச்சிறந்த சுற்றுச்சூழல் சேவையாக வரலாற்றில் இடம்பெறும்” என இங்கு விசேட அனுசாசனை உரை நிகழ்த்திய நாமல் உயனவின் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரர் குறிப்பிட்டார்.
இந்தத் நிகழ்வு நாளை (27) தேசிய நாமல் உயனவில் நடைபெறவிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை மிகவும் பாராட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உள்ள தேவையை இந்நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரையும் ஒன்றிணைத்து தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.






